
பணம் என்றால் என்ன?
நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.
எனக்கு முடி வெட்டிக் கொள்ள வேண்டும், அதை செய்யும் கலைஞரின் உழைப்புக்கு மாறாக நான் அவருக்கு எனது உழைப்பை வழங்க வேண்டும். என்ன செய்யலாம்?
அவரது கடைக்கு நல்ல விளம்பரமாக அமையும்படி ஒரு வாசகத்தை உருவாக்கி, கணினியில் உள்ளிட்டு அழகாக அச்சடித்துக் கொடுக்கலாம். அதை கடைக்கு முன்பு கட்டிக் கொண்டால் இன்னும் பலர் கடைக்கு வருவதால் அவரது வருமானம் அதிகமாகலாம்.
இந்த முறைக்குப் பெயர் பண்ட மாற்று.
எனக்குத் தேவையான சேவை அல்லது பொருளைத் தேடிப் போகும் போது அதை கொடுக்க கூடியவரைக் கண்டு கொண்டால் மட்டும் போதாது. அவரது பணிக்கு மாறாக அவருக்குத் தேவையானதைக் கொடுக்க என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஏற்கனவே கடையில் நல்ல விளம்பரப் பலகைகள் இருந்தால் எனது கணினித் திறனின் சேவை அவருக்குத் தேவைப்படாமல் போய் விடும்.
இரண்டாவதாக, 'ஒரு முடி வெட்டுக்கு இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா' என்று நான் நினைக்கலாம். 'ஒரு முடி வெட்டுக்கு நான்கு தட்டிகள் தர வேண்டும்' என்று கடைக்காரர் சொல்லலாம். இப்படி பேரம் பேசுவதும் சிக்கலாகிப் போய் விடும். 'இதே போன்ற தட்டியை போன வாரம் ஒரு பெரிய உணவு விடுதிக்குச் செய்து கொடுத்து மாற்றாக அவர்களது விடுதி அறையில் நான்கு நாட்கள் தங்கும் வசதியைப் பெற்றதுடன்' ஒப்பிட்டால் இந்த முடி வெட்டுக்கு ஒரு தட்டி என்பது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.
பண்ட மாற்று முறை மட்டும் இருந்தால் இது போல பொருளின், சேவையின் மதிப்பு வாங்குபவர்களின் தேவை, விற்பவரின் விலை மட்டும் சார்ந்திராமல், மாற்றுப் பொருளுக்கான விலை, செலவு என்று நான்கு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
இப்படித்தான் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் பொருட்களை, சேவைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது உணர்ந்திருப்பார்கள்.
வலுவான ரூபாயின் விளைவுகள்
டாலரின் மதிப்பு குறைந்ததால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
௧.நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் விற்பனை குறையும்.
ஒரு பொருள் செய்ய 100 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம் டாலருக்கு 45 ரூபாய் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த பொருளை லாபமும் சேர்த்து 2.5 டாலருக்கு விற்றால், ஏற்றுமதியாளருக்குக் கையில் 112.50 ரூபாய்கள் கிடைக்கும். 12.50 ரூபாய்கள் லாபம்.
இப்போது அதே பொருளை 2.5 டாலருக்கு விற்றால் (1 டாலர் 39.50) 99.50 காசுகள்தான் கிடைக்கும். 50 காசுகள் இழப்பு.
இதைச் சரிகட்ட செலவுக் கணக்கைக் குறைக்கப் பார்க்கலாம் அல்லது விற்பனை விலையை ஏற்றப் பார்க்கலாம். வாடிக்கையாளர் விலையை 2.70 ஆக ஏற்ற ஒப்புக் கொண்டால் அதே பொருளை விற்று 106.60 ரூபாய்கள் கிடைக்கும். கூடவே உள்ளிடு பொருட்கள் வாங்கும் போது விலை குறைக்கச் சொல்லி கேட்கலாம். தேவையில்லாத செலவுகளைக் குறைக்கலாம், முதலீடுகளைத் தள்ளிப் போடலாம். பழையபடி 12.50 ரூபாய்கள் லாபம் நிற்கும் படி முயற்சிப்பார்கள்.
௨.வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்கள் மலிவாகக் கிடைக்க ஆரம்பிக்கும்.எரிஎண்ணையின் விலை பேரலுக்கு 70 டாலர்கள் என்றால் அதன் விலை முன்பு 70*45=3150 ரூபாய்களாக இருக்கும். இன்றைக்கு அதே விலை எண்ணெய் வாங்க 70*39.5= 2765 ரூபாய்கள் செலவழித்தால் போதும்.
இது இரண்டு வகையில் போகலாம். திறமையான மக்களாக இருந்தால் இப்படிக் கிடைத்த தமது நாணயத்தின் வலிமையைப் பயன்படுத்து வெளி நாடுகளிலிருந்து மூலப் பொருட்களை வாங்கி தமது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வார்கள் அல்லது முதலீட்டில் செலவிட்டு புதிய இயந்திரங்கள், வெளி நாட்டில் விற்பனை அலுவலகங்கள் என்று ஆரம்பித்து தமது உற்பத்தி வலிமையையும் சந்தைப்படுத்தும் திறனையும் அதிகப்படுத்திக் கொள்வார்கள்.
மாறாக, இறுதிப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தால் உள்ளூர் மக்களின் பாடு திண்டாட்டமாகிப் போகும்.
இந்தியாவில் அரிசி கிலோ 25 ரூபாய்க்கு விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். பழைய மதிப்பில் கிலோ 0.5 டாலருக்கு அமெரிக்காவின் அரிசி இங்கு வந்து சேர்ந்தால் அடக்க விலையே 22.50ல் ஆரம்பிக்கும் (45*0.5). இப்போது அதே அரிசியின் அடக்க விலை ரூபாய் 19.75 ஆக இருக்கும். மற்ற செலவுகள் போக கிலோவுக்கு 2 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்று ஒருவர் அமெரிக்க அரிசியை நம் ஊரில் விற்க ஆரம்பித்தால் விவசாயிகள் நிலைமை திண்டாட்டமாகிப் போய் விடும்.
௩.ரூபாய்களில் சம்பாதிப்பவர்களின் வளம் அதிகரிக்கும். இந்தியாவில் செயல்படும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு நல்ல ஆதாயம். புதிய கருவிகள் வாங்கும் செலவுகள், வெளிநாட்டு இணைப்புக்குக் கொடுக்கும் கட்டணம் எல்லாம் குறைந்து விடும். வருமானமோ குறையப் போவதில்லை.
இந்தியாவிலிருந்து துபாய்க்கு தொலைபேசி அழைப்புக்குக் கட்டணம் நிமிடத்துக்கு 4.50 ரூபாய்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 0.05 டாலர்கள் துபாய் நிறுவனத்துக்கு பிஎஸ்என்எல் கொடுக்க ஒப்பந்தம். முந்தை செலாவணி விகிதத்தில் ஒரு நிமிடத்துக்கு கொடுக்க வேண்டிய தொகை 2.25 ரூபாய்கள், மிஞ்சும் தொகை 2.25 ரூபாய்கள். இப்போதைய விகிதத்தில் கொடுக்க வேண்டிய தொகை அதே 0.05 டாலர்களுக்கு ரூபாய்களில் 1.95 காசுகள். ஒரு நிமிடத்துக்கு 30 காசுகள் லாபம்.
இது 2வதாக சொன்ன அதே இறக்குமதி ஆதாயம்தான். துபாய் நிறுவனத்தின் சேவையை இறக்குமதி செய்து கொடுக்கிறது இந்திய நிறுவனம். அதற்கான செலவு குறைவு.
இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்கள் குறைக்கப் படலாம். எதிர்மறையாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை அழைக்கும் கட்டணங்கள் உயரலாம்.
4. வெளிநாடுகளில் சுற்றிப் பார்க்க, தொழில் தொடர்பாக, படிக்கப் போகும் இந்தியர்களுக்குச் செலவு குறைவு.ஆங்காங்கில் விற்பனை அலுவலகம் ஒன்றைத் திறந்து அந்த ஊர் ஊழியரை வேலைக்கு வைக்க ஆகும் மொத்த செலவு மாதத்துக்கு 5000 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். டாடா தேயிலை நிறுவனம் குறைந்த செலவில் அலுவலகத்தை ஆரம்பித்து நடத்தலாம். முன்பு 2.225 லட்ச ரூபாய்கள். இப்போது 1.95 லட்ச ரூபாய்கள்தான்.
இரண்டு ஆண்டுகள் மேலாண்மை படிப்புக்குச் செலவு 20000 டாலர்கள் என்றால் முன்பு 9 லட்சம் ரூபாய்கள் தேவைப்படும் இப்போது 7.9 லட்சத்தில் முடித்து விடலாம்.
நியூயார்க்கில் ஒரு இரவு தங்குவதற்கான விடுதிச் செலவு 80 டாலர்கள் என்றால், இப்போதைய செலாவணி விகிதத்தில் 420 ரூபாய்கள் குறைவான செலவு.
5. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பும் போது கிடைக்கும் மதிப்பு குறைந்து விடும். 1000 டாலர்கள் சேமிப்பு முன்பெல்லாம் 45 ஆயிரங்களாக மாறிக் கொண்டிருந்தது, இப்போது 39 ஆயிரங்கள்தான் கிடைக்கும்.
என்னென்ன செய்யலாம்?
முதலீடுகளை டாலர்களில் செய்யலாம். வேலை பார்க்கும் நாட்டிலோ, டாலர்களில் செலாவணி நடக்கும் நாடுகளிலோ சொத்துக்களை வாங்கிப் போடலாம்.இந்தியாவில் முதலீட்டுக்காக வாங்கி வைத்திருந்த சொத்துக்களை விற்று டாலராக மாற்றிக் கொண்டால் லாபம் கிடைக்கும்.ஒரு ஆண்டு முன்பு 20 லட்சம் ரூபாய்களுக்கு ஒரு வீடு வாங்கும் போது அதற்காக 45,000 டாலர்களை மாற்றிச் செலவழித்திருக்க வேண்டும். இப்போது அதே வீட்டை அதே விலைக்கு விற்று டாலராக மாற்றினால் 50,000 டாலர்களுக்கு மேல் கிடைக்கும். நிகர லாபம் 11%. வீட்டு விலைகள் தாறுமாறாக ஏறியிருக்கும் நிலையில் அதே வீட்டுக்கு 40 - 45 லட்சங்கள் கிடைத்தால் அதை டாலராக மாற்றி வேலை பார்க்கும் நாட்டில் முதலீடு செய்யலாம்.
ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்மென்பொருள், துணி, ஆடைகள், தோல் போன்ற துறை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தலுக்குத் தயாராக வேண்டும். முன்பு போன்ற ஊதிய உயர்வுகள், புதிய வேலையில் தாவும் வாய்ப்புகள் இருக்காது.தொலை தூர நிறுவனச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். பல மாறுதல்களைப் பார்க்கலாம்.
நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்
டாலரின் மதிப்பு 4 ரூபாய் வரை குறைந்ததால் ஏற்றுமதித் துறையில் பணப் புழக்கம் நெரிந்துள்ளது. மாதம் 10,000,000 டாலர் (நாலரைக் கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்து கொண்டுருக்கும் ஒரு நிறுவனத்தில் மாதத்துக்கு 40 லட்சம் ரூபாய் பண வரத்து குறைந்து விடும். பல இடங்களில் செலவைக் குறைப்பார்கள்.இந்த நெரிசலில் பல நிறுவனங்கள் நொடித்துப் போக வாய்ப்பு இருக்கிறது. என்னதான் நல்ல பொருள்/சேவை வழங்கினாலும், எதிர்கால சாத்தியங்கள் இருந்தாலும் நிகழ்காலத்தில் பணப் புழக்கம் நின்று போனால் உயிர் நின்று விடும். உடலில் ரத்த ஓட்டம் போல அது. வர வேண்டிய பணம் என்று எவ்வளவு இருந்தாலும் கையில் இருக்கும் பணமாக மாறாத வரை பலனில்லை.பெரிய நிறுவனங்கள் இந்த மாற்று வீதக் குறைவிலிருந்து தப்பிக்க ஏற்பாடுகள் செய்திருந்ததால் இப்போதைய விளைவுகளைத் தவிர்த்தாலும். அடுத்த பருவத்துக்கான கணக்கிடுதலில் உதைக்கப் போகிறது.உற்பத்தித் துறையைப் பொறுத்த வரை வலுவான ரூபாய் ஆறு மாத நோக்கில் ஏற்றுமதி திறனை அதிகரிக்கத்தான் செய்யும்.
இறக்குமதி இடுபொருட்களின் விலை குறைதல்,
பொதுவான உள்நாட்டு விலை வாசி குறைதல்,
வாடிக்கையாளரிடம் விலை மாற்றம் கோருதல்என்று நான்கைந்து மாதங்களில் திறமையான தொழில் முனைவோர், முன்பை விட வலிமையாகி விடுவார்கள். இடைப்பட்ட மாதங்களில் பல்லைக் கடித்துக் கொண்டு இடுப்புப் பட்டையை இறுக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.1990களில் ரூபாயின் மதிப்பு குறையும் போது ஒவ்வொரு முறையும் இது ஏற்றுமதி வணிகத்துக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டாலும். அந்தத் தாக்கம் சில மாதங்களிலேயே சமன் படுத்தப்பட்டு ஏற்றுமதி வியாபாரமும் தத்தளிக்கத்தான் செய்தது. மலிவான விலை என்ற ஒரே வலிமையில் செய்யும் தொழில்கள் மறைந்தாலும், ஒட்டு மொத்தமான திறமையுடன் செயல்படும் உற்பத்தித் தொழில்கள் வளப்பட வலிமையான நாணயம் உதவுகிறது என்றே படுகிறது.