விரைவில் செல்போன் மூலம் பணம் அனுப்பும் வசதி
செல்பேசி என்பது நாளடைவில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் செய்யும் ஒரு தொழில்நுட்ப சாதனமாக வளர்ச்சியடைந்து வருகிறது.தற்போது செல்பேசி மூலம் பணம் அனுப்பும் தொழில்நுட்பம் தயாராகி உள்ளது. ஆனால் இந்த சேவையை வழங்குவோர் அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.ஒரு ப்ரீபெய்ட் அக்கவுண்டை எப்படி ஆபரேட் செய்கிறோமோ, அதே போல் பணம் அனுப்புவதும் எளிதாக்கப்பட்டுள்ளது.அதாவது உங்கள் செல்பேசியை பணத்துடன் "டாப் அப்" செய்யவேண்டும். இப்போது பணத்தை எஸ்.எம்.எஸ். மூலம் நீங்கள் விரும்பும் நபருக்கு அனுப்பிவிடலாம்.பணத்தைப் பெறுபவர் தனி அடையாள எண் (PIN)-ஐ போல் ஒரு எண்ணைப் பெறுவார். இந்த எண்ணைக் காண்பித்து அந்த குறிப்பிட்ட செல்பேசி இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் வினியோக மையத்தில் உடனடியாகத் சம்பந்தப்பட்ட நபர் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.யாருக்கேனும் மிக அவசரமாக பணம் தேவைப்படும்போது, இந்தியாவில் அதனை உடனடியாக கொண்டு சேர்ப்பிக்க முடியாது. தபால் அல்லது வங்கியின் மூலம் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இதனால் கால தாமதம் ஏற்படும்.எனவே செல்பேசி மூலம் உடனடியாக பணம் அனுப்ப முடியுமெனில் அது ஒரு பெரிய விஷயமே. மக்களிடம் இதற்கு வரவேற்பு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இது குறித்த அறிவிப்பை ஒரு மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் 2-3 வாரங்களில் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. சுமார் 16 கோடி பேரிடம் செல்பேசிகள் இருக்கும் நாடாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த செல்பேசி பண மாற்று நடவடிக்கை, சேவை வழங்கும் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் அனுப்பும் தொகையில் 4 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படலாம். உள்நாட்டு பண பரிமாற்றத்திற்கு எஸ்.எம்.எஸ்-ற்கு ஆகும் செலவு மட்டுமே.பார்தி ஏர்டெல் நிறுவனம் இதற்காக ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த திட்டத்தை இந்தியாவின் சில கிராமங்களில் பரிசோதனை முயற்சியாக நடத்தி வருகிறது. வோடஃபோன் நிறுவனம் சிட்டி வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.ரூ.1000 விலையுள்ள, இன்டர்நெட் இணைப்பு வசதி இல்லாவிட்டாலும், ஒரு ரிலையன்ஸ் செல்பேசியிலிருந்து, ஐசிஐசிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் செல்பேசி மூலம் பண பரிமாற்றங்கள் செய்து கொள்ள முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
